February 13, 2009

முஹம்மது இரக்கமே உருவானவர். அவரது இரக்கம் அவரைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்ந்திழுத்தது.

-  திவான் சந்த் ஷர்மா (D.C.Sharma – The Prophets of the East Calcutta 1935 pp 12)


சிலம்பொலி சு.செல்லப்பன்

February 9, 2009

sellappan
பரந்து கிடக்கும் தமிழிலக்கியங்களில் பெரும்பாலும் கம்பராமாயணம் மகாபாரதம், கந்தபுராணம், பெரிய புராணம் ஆகியவையே சொற்பொழிவுகளாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. மற்ற சிறந்த இலக்கியங்களும் இந்நிலை எய்த வேண்டும் என்பது என் விழைவு.

ஆதலின் என் சென்னை வாழ்க்கையின்போது அங்கே பல்வேறு அமைப்புகளில் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சிற்றிலக்கியங்கள், பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள், இராவண காவியம் ஆகியவற்றைத் தொடர் சொற்பொழிவுகளாக ஆற்றியுள்ளேன். ஒவ்வொரு தொடரும் ஏறத்தாழ இருபது பொழிவுகளில் அமைந்தது.

என் பொழிவுகளைக் கேட்க என் அருமை நண்பர் மணவை முஸ்தபா வருவது வழக்கம். அவர், இந்த இலக்கியங்களைப் போலவே ஏதேனுமோர் இசுலாமிய இலக்கியத்தை நான் தொடர் சொற்பொழிவாற்ற வேண்டுமென விரும்பினார். இஸ்லாமிய இலக்கியங்களில் பயின்று வரும் அரபு, பார்சிச் சொற்கள், சமய நெறிமுறைகள் ஆகியவற்றில் சிறிதும் பயிற்சியற்ற நான் இப் பணியைச் செய்ய முடியுமா என ஐயுற்றேன். நண்பர் வலியுறுத்தவே, நபிகள் நாயகத்தின் வரலாறு கூறுவதும் தமிழ்க் காப்பியங்களில் சிறப்பிடம் பெற்றிருப்பதுமான சீறாப்புராணத்தைப் பேச ஒப்பினேன்.

மணவை முஸ்தபாவின், “மீரா பவுன்டேசன்’ கூட்ட ஏற்பாட்டைச் செய்தது. சென்னை மறைமலையடிகள் நூலகத்தின் மாடியில் உள்ள, வள்ளலார் மணி மண்டபத்தில் கூட்டங்கள் ஏற்பாடாயிற்று. மறைமலையடிகளார் சீரிய சைவர்; வள்ளலாரோ சமரச சுத்த சன்மார்க்கம் கண்டவர்; அங்கு பேசவிருக்கும் இலக்கியமோ நபிகள் நாயகம் வரலாறு பற்றியது. இந் நல்லிணக்கமே என் மனதுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

எடுத்த பணியைச் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதால் கவி கா.மு. ஷெரீப், முஸ்லிம் முரசு இதழின் முன்னாள் ஆசிரியர் மதிப்பிற்குரிய ஹஸன் ஆகியோர்களிடம் சென்று பல்வேறு விளக்கங்களைப் பெற்றேன். அவ்விருவரும் ஒரு மாணவனுக்குப் பாடம் நடத்துவதுபோல எனக்கு விளக்கம் தந்தனர். மேலும் நான் படிக்க வேண்டிய பல பயனுள்ள நூல்களையும் கொடுத்து உதவினர். தமிழில் தன் முன்னேற்ற நூல்களை முதன்முதலாக எமுதிய பெருமைமிகு அப்துற் றஹீமைக் கண்டேன். அவர் ஓயாத எமுத்துப் பணியை மேற்கொண்டவர். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையைத் தனியொருவராகச் செய்தவர். அவர் எமுதிய, “இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்’ மூன்று தொகுதிகளையும் கொடுத்து, “”உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க இவை உதவும்” என்று ஊக்கமளித்தார்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையாக, கூட்டங்கள் தொடர்ந்து ஓராண்டு நடந்தன. ஒரு கூட்டத்திற்கும் அடுத்த கூட்டத்திற்குமிடையே இருந்த 15 நாட்களில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரமாவது, அடுத்த கூட்டத்திற்குரிய பொருள்பற்றி விரிவாகவும் ஆழமாகவும் படித்து வந்தேன்.

முதல் நாள் கூட்டம்; முந்நூறு பேருக்குமேல் குமுமியிருந்தனர். பாதியளவு முஸ்லிம்கள்; ஏதாவது பிழை நேர்ந்துவிடுமோ என்ற அச்சம். குழந்தை’ சோறு என்பதைச் “”சோச்சி” என்று சொன்னாலும் அதைத் தவறாகக் கொள்ளாமல் குழந்தையின் மழலையாக எண்ணி மகிழ்வதுபோல் நான் ஏதாவது தவறாக உச்சரித்தால் “அது குழந்தைப் பேச்சு” எனக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளோடு தொடங்கினேன். கூட்ட முடிவில் அனைவரும் பாராட்டி உற்சாகப்படுத்தினர். அவ்வப்போது இஸ்லாமிய நண்பர்கள் என்னைக் கண்டு என் பொழிவில் இருந்த குறை நிறைகளைச் சுட்டிக் காட்டியதோடு எவ்வெப்பகுதியை நான் எவ்வாறு கூற வேண்டும் என்றும் ஆற்றுப்படுத்தி ஊக்கமூட்டினர்.

நானும் முடிந்த அளவு முமுமையாக அறிந்த பிறகே எதையும் கூறினேன். ‘தொழுகை வந்த வரலாற்றுப் படலம்’ பற்றிப் பேச வேண்டியதற்கு முன்பு பள்ளி வாசலுக்குச் சென்று, அங்கிருந்த இமாமின் இசைவுடன் தொழுகையை முமுமையாகக் கவனித்தும் அது பற்றிய அனைத்து விளக்கங்களையும் கேட்டறிந்த பிறகே சொற்பொழிவாற்றினேன். அதனால் இஸ்லாமியர்கள் தொழுகையின் உட்பொருளை அறிந்து இன்புற்றனர்; இஸ்லாமியர் அல்லாதோர் தொழுகையில் அடங்கியுள்ள செய்திகளை முமுமையாக அறிந்தனர்.

முன்னர்த் தோன்றியுள்ள காப்பியங்களோடு சீறாவை ஒப்பிட்டுப் பேசியபோது மக்கள் தனி மகிழ்ச்சி கொண்டனர். சீவக சிந்தாமணி தொடங்கி காப்பியங்களில் அவையடக்கம் காணப்படுகிறது. கம்பர் தான் இராமாயணத்தைப் பாடுவது, “பாற்கடலைப் பூனை நக்கிக் குடிப்பதற்கு ஒப்பாகும்” என்பார். இம் முறையில் உமறுவும் நற்றமிழ்ப் புலவர்முன் தான் காவியம் படைப்பது என்பது, “கடல்களும் மலைகளும் நிலைகுலையும்படியாக வீசுகின்ற சூறைக் காற்றின்முன் பசியால் வாடி இளைத்து நொந்த ஒரு சிற்றெறும்பு பெருமூச்சுவிடுவது போலாகும்” என்கிறார். மேலும் “இடி இடித்திடும் ஆரவாரத்தினுக்கு எதிரே ஓர் நொடிநொடிப்பது போலும்” என்றும் குறிப்பிடுவார். இவ்வாறான இலக்கிய ஒப்பீடுகளைக் கூறியபோது கேட்டவர் உமறுவின் தமிழ்ப் புலமையை உணர்ந்து இன்புற்றனர்.

அரபு, பார்சிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களுடன் இணைத்துப் பாடும்போது உமறுப்புலவர் காட்டுகின்ற நயங்களைச் சுட்டிக்காட்டியபோது அவையில் மகிழாதார் எவரும் இலர். ‘ஈமான்’ எனும் அரபுச் சொல்லுக்கு “நம்பிக்கை” என்பது பொருள். இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகள் மீது ஈமான் கொண்டவரே இஸ்லாமியராக முடியும். சீறாப் புராணத்தில் ஒரு நிகழ்ச்சி. புலி துரத்தியதால் மான் கூட்டம் சிதறி ஓடியதில் ஆண் மானையும் அண்மையில் பிறந்த கன்றினையும் பிருந்து வந்த பெண் மானை வேடன் ஒருவன் பிடித்துத் தனக்கு நல்ல உணவாகும் எனக் கட்டிப்போட்டிருந்தான்.

அவ்வழியே வந்த நபிகள் நாயகத்திடம், “”என்னை விட்டால் ஓடிப்போய் என் குட்டிக்குப் பால் கொடுத்துத் திரும்பி வந்து விடுவேன்” என மான் வேண்டியது. நாயகமவர்கள் வேடனிடம் இதைக் கூறி அம் மானை விடுவிக்குமாறு கேட்டார். “”ஓடிப் பிழைக்கும் மான் ஒருபோதும் திரும்பாது” என்றான் வேடன். “”மான் வராவிட்டால் ஒன்றுக்கு இரண்டாக நான் தருவேன்” என நாயகம் பிணை நின்றதும் வேடன் மானை விடுவித்தான். மான் வேகமாக ஓடி, கன்றுக்குப் பால் கொடுத்தது; வேடனிடம் செல்லத் திரும்பியது; அதன் ஆண் மானும் மற்ற மான்களும் தடுத்தும் கேட்கவில்லை; தாய் மான் எவ்வளவு சொல்லியும் கேளாது கன்றும், அதனுடனேயே வந்தது. மான் ஒன்றுக்கு இரண்டாக வருவதைக் கண்ட வேடன் மனந்திருந்தி, மானை விட்டதோடு இஸ்லாத்திலும் சேர்ந்தான்.

இந் நிகழ்ச்சியைக் கூறும் உமறுப் புலவர்,

மானைக் கொண்டுவரப் போய்
ஈமானைக் கொண்டு அகத்திற் புக்கான்
என்று பாடுகிறார்.

‘மான் – ஈமான்’  இரண்டையும் இணைத்து உமறுப்புலவர் பாடியிருக்கும் நயத்தை விளக்கியபோது அவையினருன் உவகைக்கு அளவேயில்லை. உமறுப் புலவரின் தமிழ்ப் புலமை, முந்தைய காப்பியங்களின் முறைநின்று எமுதியுள்ள தன்மை, இஸ்லாமிய நெறிமுறைகளைச் சரியாக எடுத்துரைத்துள்ள திறமை ஆகிய இவற்றை ஓர் இலக்கிய மாணவன் எனும் நிலையில் நின்று சீறாப்புராணப் பொழிவுகளை ஆற்றினேன். இஸ்லாமிய இலக்கியங்களில் மற்றும் கொள்கைகளில் விளக்கம் வேண்டுமெனில், சென்று கேட்கத் தகுந்தவர்கள் எனும் பட்டியலில் என்னையும் ஒருவனாக ஆக்கியுள்ளது சீறாப்புராணம்.

சீறாப்புராணத்தை அடுத்து, சுலைமான் நபி அவர்களுடைய வரலாற்றினைக் கூறும் “”இராஜ நாயகம்” எனும் காப்பியத்தையும் தொடர் சொற்பொழிவு ஆற்றியுள்ளேன்.

சீறாப்புராணத் தொடர் சொற்பொழிவு நிறைவு விழாவில் கலந்து கொண்ட நீதியரசர் மாண்புமிகு மு.மு. இஸ்மாயீல் என்னிடம், “”இஸ்லாமியர்களிடையே அச் சமயம் பற்றி அவர்கள் மனங்கோணாமல் 25 கூட்டங்கள் எப்படி உன்னால் பேச முடிந்தது?” என்று வியந்து கேட்டார். அந்நிறைவு விழாவில் அவர்கள் வாயிலாக, “சீறாச் செல்வர்” எனும் சிறப்புப் பெயர் எனக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமியர் அல்லாத ஒருவர் இஸ்லாமியக் காப்பியங்கள் இரண்டினைத் தொடர் சொற்பொழிவாக ஆற்றிய வாய்ப்பு இதுவரை என் ஒருவனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பதை எண்ணிப் பேருவகை கொள்கிறேன்.

நன்றி : தினமணி ஈகைப் பெருநாள் மலர்


நெல்லை கண்ணன்

February 8, 2009

nellai-kannan

உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே
 …..உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம் 
நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே
 …..நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய்
 மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார்
 …..மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார்
  கண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை
  …..கடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார்

  படைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர்
  …..பார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை
  இடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில்
  …..எல்லோர்க்கும் உதவி செய்வீர் நன்மை செய்வீர்
  கடையனென்று எவனுமில்லை இறைவன் முன்னே
  …..கருணையில்லார் மட்டுமே கடையராவார்
  உடைமையென்று மென்மேலும் சேர்த்து சேர்த்து
  …..உள்ளமின்றி வாழாதீர் வழங்கி நில்லும்

  கொடுமையினைச் செய்வானைக் காப்பாற்றுங்கள்
 ….. கொடுமையினால் வீழ்ந்தானைக் காப்பாற்றுங்கள்
  பட படத்தார் கேட்டார்கள் பெருமானிடம்
  …..பாவியினைக் காப்பதுவா எவ்வாறென்று
  கொடுமையினைச் செய்வானுக்கு அன்பு சொல்லி
  …..கொடுமையினைச் செய்யாமல் திருத்திடுங்கள்
  படுகிறவன் துயரத்தை உணர்த்தி அந்தப்
  …..பாவத்தில் இருந்து அவனை விலக்கிடுங்கள்

  நல்லவரைப் பதவியிலே அமர்த்தல் விட்டு
  …..நாசவேலை செய்வோரை அமர்த்துகின்றார்
  அல்லாவை அவரளித்த தூதர் தம்மை
  …..ஆண்டவனுக்கு அஞ்சி வாழும் உண்மையோரை
  பொல்லாத அச் செயலால் புறக்கணித்து
  …..பொறுப்பின்றி அவர்கட்குத் துரோகம் செய்வார்
  அல்லாவின் தீர்ப்பு நாளில் அவர்க்கு அல்லா
  …..அளிப்பாரே நரகத்தை உண்மை உண்மை

 கல்வி வழி ஞானத்தைப் பெற்றோரன்றி
 …..கடவுளினைத் தீயவர்கள் அறிவதில்லை
 நல்ல கல்வி இறைவனையே நம்பி நிற்கும்
 …..நலமற்றோர் இறை இல்லை என்று நிற்பார்
 வல்லவனாம் இறைவனையே வணங்கி நிற்போர்
 …..வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார் இறையருளால்
 அல்லாவை வணங்கி நிற்பீர் அருள் பெறுவீர்
 …..அகிலமெல்லாம் அவன் கொடையே பணிந்து நிற்பீர்  

எழுதியது நெல்லை கண்ணன்

   நபி பெருமான் சொன்ன பதில்
 
  இனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று
  …..இறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்
  வினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்
  …..விரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்
  இனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்
  …..எல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்
  இனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்
  …..இனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்

எழுதியது நெல்லை கண்ணன்

  (வேத வரிகளும் தூதர்மொழிகளும்)
  வெளியீடு இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
  138,பெரம்பூர் நெடுஞ்சாலை சென்னை 12